குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.தெல்லிப்பளை பிரதேசத்தில். களவில் ஈடுபட முனைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள குளமன்கால் பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளை திருடும் நோக்குடன் புகுந்துள்ளனர்.
வீட்டு வளவுக்குள் சத்தம் கேட்டதை உணர்ந்து சுதாகரித்த வீட்டு உரிமையாளர் ‘திருடன் திருடன் ‘ என கூக்குரல் எழுப்பியதனையடுத்து வீட்டு வளவினுள் புகுந்த இருவரும் அங்கிருந்து வெளியே தாம் கொண்டு வந்து நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பியோட முனைந்துள்ளனர். அதேவேளை கூக்குரல் சத்தம் கேட்டு ஒன்று திரண்ட அயலவர்கள் தப்பி செல்ல முயன்ற இருவரையும் மடக்கி பிடித்தனர்.
மடக்கிப்பிடிக்கப்பட்ட இருவருவரில் ஒருவர் அயல் கிராமத்தை சேர்ந்தவர் எனவும் , மற்றையவர் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் கடமை புரியும் காவல்துறை உத்தியோகஸ்தர் எனவும் ஊரவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.
அதன் பின்னர் தெல்லிப்பளை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினரிடம் இருவரும் ஊரவர்களால் ஒப்படைக்கப்பட்டார்.
அதேவேளை இருவரும் மது போதையில் இருந்ததாகவும் , அவர்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் கடமையாற்றும் பிறிதொரு காவல்துறை உத்தியோகஸ்தருடையது எனவும் தெரிவிக்கப்பட்டது.