குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியலை விடவும் தமது சட்டத்தரணி தொழில் முக்கியமானது என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது நேற்றைய தினம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் தேவைகளுக்காக சட்டத்தரணி தொழிலின் நேர்மைத்தன்மையை இழக்கத் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உரிய முறையில் நடத்தத் தவறியதாகவும் பிரதமரின் அனுமதியின்றி வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டதாகவும் அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன் உத்தியோகபூர்வமாக மொல்டாவிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த கால தவறுகள் காரணமாகவே தேர்தலை உரிய முறையில் நடத்த முடியவில்லை எனவும், தாம் மனச்சாட்சிக்கு நேர்மையாக தேர்தலை நடத்த முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.