இலங்கையில் சட்ட ரீதியான பிரச்சினைகள் இல்லாத 93 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்பு மனுக்களை கோரும் அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள 79 உள்ளூராட்சி சபைகளில் 24 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன.
வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள 17 சபைகளில் ஒரு சபைக்கு மட்டும்தான் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள எந்தவொரு சபைக்கும் தேர்தல் வேட்பு மனு கோரும் அறிவிப்பு வெளியாகவில்லை.
தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரிகளினால் வெளியிட்டுள்ள இந்த அறிவித்தலின் பிரகாரம், எதிர்வரும் 14-ஆம் தேதி நண்பகல் வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். வட மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி சபைகளில் யாழ் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி நகர சபைக்கு மட்டும்தான் வேட்பு மனு கோரப்பட்டுள்ளது. 35 சபைகளை கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் 23 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்திலே கூடுதலான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடை பெறவுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள 20 சபைகளில் அக்கரைப்பற்று மாநகர சபை உட்பட 12 சபைகளுக்கு வேட்பு மனு கோரும் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி, சம்மாந்துறை, இறக்காமம், அக்கரைப்பற்று , அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு , காரைதீவு, தெகியத்த கண்டிய, நாமல் ஓயா மற்றும் பதியத்தலாவ ஆகிய பிரதேச சபைகள் ஏனைய உள்ளூராட்சி சபைகள் ஆகும்.
12 உள்ளூராட்சி சபைகளை கொண்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கும் ஏறாவூர் பற்று (செங்கலடி). கோறளைப் பற்று (வாழைச்சேனை) மண்முனை (ஆரையம்பதி) பிரதேச சபைகளுக்கும் என 4 சபைகளுக்கு வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை 13 ஆகும். வெருகல், சேருவில, திருகோணமலை பட்டினமும் சூழலும், தம்பலகாமம், கிண்ணியா , பதவி சிறிபுர மற்றும் கோமரங்கடவல ஆகிய 7 பிரதேச சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் டிசம்பர் 13 நண்பகல்வரை தமது கட்டுப் பணத்தை செலுத்த முடியும். அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி வேட்பாளருக்கு 1,500 ரூபாய் என்ற ரீதியிலும் சுயேட்சைக் குழு வேட்பாளரொருவருக்கு 5,000 ரூபாய் என்ற ரீதியிலும் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் உட்பட 346 சபைகளுக்கும் குறித்த தினத்தில் வேட்பு மனுக்களை கோர தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தது.
203 உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை மீள் நிர்ணயம் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக 17.02 2017 இல் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், எதிர்வரும் 4-ம் தேதி வரை மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த சபைகளுக்கு தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்மனுவை குறித்த தினத்திற்கு முன்னதாக விசாரணைக்கு எடுக்குமாறு நேற்று திங்கட்கிழமை சட்டமா அதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம் நாளை மறுதினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கவுள்ளது.
மேலும் 40 சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் அச்சு பிழைகள் உட்பட சில காரணங்களினால் அதற்கான வேட்பு மனுக்களையும் கோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
BBC