ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறை விவகாரத்தில் பாராமுகமாக இருந்த மியான்மரின் நடைமுறை தலைவராகக் கருதப்படும் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் சுதந்திர விருது பறிக்கப்பட்டுள்ளது. மியான்மாரில் பௌத்த மதத்தினருக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு ராக்கைன் மாகாண பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதில் பலர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மியான்மாரிலிருந்து பங்களாதேசுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மியான்மாரிலிருந்து பங்களாதேசுக்கு ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
பலகாலமாக மியான்மரின் ஆட்சியை கைப்பற்றி வைத்திருந்த ராணுவம் இஸ்லாம் மதத்தினரான ரோஹிங்கியா மக்கள்மீது அடக்குமுறையை பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே ஆங் சான் சூகி-க்கு பிரித்தானிய அரசால் வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் சுதந்திர விருது பறிக்கப்பட்டுள்ளது,
இதுதொடர்பாக, நேற்றிரவு நடைபெற்ற ஒக்ஸ்போர்ட் நகர கவுன்சில் கூட்டத்தில் 1997-ம் ஆண்டு ஆங் சான் சூகி-க்கு அளிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் விருதினை பறிக்கும் தீர்மானத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.