தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங்ககுக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான கூட்டுறவை மேம்படுத்தும் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட பொருளாதார கூட்டுறவு தொடர்பான உடன்படிக்கையில் தென் கொரிய பொருளாதாரத்துறை அமைச்சரும் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் கைச்சாத்திட்டனர். தொழில் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பான ஒப்பந்தத்தில் அமைச்சர் தலதா அத்துக்கோரலவும் அந்நாட்டின் தொழில் அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.
2017 – 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஒத்துழைப்பு நிதியத்தின் மூலம் வழங்கப்படக்கூடிய கடன் தொடர்பான ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது. இதில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.
முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை முதலீட்டு அபிவிருத்திச் சபை மற்றும் தென் கொரிய வர்த்தக முதலீட்டு அபிவிருத்தி நிறுவனத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது. முதலீட்டு அபிவிருத்தி சபையின் தலைவர் துமிந்த ரத்னாயக்க மற்றும் கொரிய நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்கிடையிலான கலை, கலாசாரத்துறை, கல்வி, இளைஞர் விளையாட்டுத்துறை தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.