கொழும்பு, காலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்றுடன் கூடிய அடைமழை பெய்து வருவதை தொடர்ந்து மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீனவர்களும் கடற்படையினரும் கடலுக்குச் செல்லும் போது கூடிய அவதானத்துடன் இருக்கவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலை, சில நாட்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
தென் மற்றும் தென்மேற்கு பிரதேசங்களில் கடும் மழை மற்றும் காற்று வீசும் எனவும், மணிக்கு சுமார் 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்பிரதேசங்களில் மணிக்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று வீசிய கடும் காற்றுக் காரணமாக காலி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால், சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.