குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
ஆவா குழுவை சேர்ந்த மூவர் யாழ்ப்பாண காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆவா குழுவை சேர்ந்த பிரதான செயற்பாட்டாளர்கள் என காவற்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்ட இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பில் தலைமறைவாகி இருந்த போது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் கொழும்பு விரைந்த சிறப்பு காவற்துறை பிரிவினர் மூவரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.
யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மூவரும் கோண்டாவில், கொக்குவில், மற்றும் நல்லூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும , தற்போது ஆறு சந்தேக நபர்களையும் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அவர்களிடம் இருந்து பல தகவல்கள் கிடைக்க பெற்று உள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை கடந்த 22 ஆம் திகதி ஆவா குழுவின் உளவாளி எனும் சந்தேகத்தில் யாழ்.பிறவுன் வீதியை சேர்ந்த கஜபாலசிங்கம் நிதர்சன் (வயது 17) எனும் இளைஞன் கோப்பாய் காவற்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது ஆவா குழு தொடர்பில் பல தகவல்களை தெரிவித்து இருந்தார் என காவற்துறை கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.