குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
தெல்லிப்பளை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்ட தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த காவற்துறை உத்தியோகச்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள குளமன்கால் பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளை திருடும் நோக்குடன் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இருவர் புகுந்துள்ளனர்.
வீட்டு வளவுக்குள் சத்தம் கேட்டதை உணர்ந்து சுதாகரித்த வீட்டு உரிமையாளர் ‘திருடன் திருடன் ‘ என கூக்குரல் எழுப்பியுள்ளார்.
அதனை அடுத்து வீட்டு வளவினுள் புகுந்த இருவரும் அங்கிருந்து தப்பியோடி வீட்டின் வெளியே தாம் கொண்டு வந்து நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பியோட முனைந்துள்ளனர்.
அதேவேளை கூக்குரல் சத்தம் கேட்டு ஒன்று திரண்ட அயலவர்கள் தப்பி செல்ல முயன்ற இருவரையும் மடக்கி பிடித்தனர்.
மடக்கிப்பிடிக்கப்பட்ட இருவருவரில் ஒருவர் அயல் கிராமத்தை சேர்ந்தவர் எனவும், மற்றையவர் தெல்லிப்பளை காவற்துறை நிலையத்தில் கடமை புரியும் காவற்துறை உத்தியோகஸ்தர் எனவும் ஊரவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.
அதன் பின்னர் தெல்லிப்பளை காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினரிடம் இருவரும் ஊரவர்களால் ஒப்படைக்கப்பட்டார்.
அதேவேளை இருவரும் மது போதையில் இருந்ததாகவும், அவர்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிறிதொரு காவற்துறை உத்தியோகஸ்தருடையது எனவும் தெரிவிக்கப்பட்டது.
அந்நிலையில் பொலிஸ் உத்தியோகச்தருடன் திருட சென்ற பொது மகனுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து குறித்த பொதுமகனை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் காவற்துறையினர் முற்படுத்தி இருந்தனர். அதனை அடுத்து அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
அதேவேளை அவருடன் கூட சென்ற காவற்துறை உத்தியோகச்தருக்கு எதிராக இதுவரையில் எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ் உத்தியோகச்தருக்கு எதிராக உள்ளக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.