குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வைத்தியசாலைகளில் பல பற்றாக்குறைகள் இருக்கின்றன. எனினும் மருத்துவர்கள் தம்மாலான சிறந்த சேவையை வழங்கி வருகின்றனர். அதையும் தாண்டி தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் சிகிக்சை பயனின்றி சிலர் இறக்கக்கூடும். மக்கள் அவற்றைச் சரியான வகையில் புரிந்துகொள்ளாமல் மருத்துவர்களின் கனயீனக்குறைவால் உயிரிழப்பு நேர்ந்துள்ளது எனக் கூறுவது தவறு என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
உலக எச்.ஐ.வி தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் இடம்பெற்ற நடைபவனியின் நிறைவில் யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
மக்கள் தமது சுக நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது உடல் நலத்தில் கவனமின்றி பல்வேறு வியாதிகளுடன் வருகின்றவர்களையும் வைத்தியசாலை முகங்கொடுக்க நேரிடுகின்றது.
எனவே பொதுமக்கள் ஒவ்வொருவரும் சுகதேகியாக வாழவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு வாழவேண்டும். அவ்வாறே அவர்களுக்கான உரிமைகளை சுகாதார அதிகாரிகள் மருத்துவர்கள் என அனைவரும் வழங்கத் தவறகூடாது என மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் உதவிப்பணிப்பாளர் மருத்துவர் எஸ்.பவானந்தராஜா, எயிட்ஸ் தடுப்பு பிரிவின் மருத்துவ வல்லுனர் பிரியந்த பட்டேகெல, தாதியர்கள், தாதிய பயிலுனர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.