குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆவா குழுவின் சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அக்குழுவிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. யாழ். காவல்துறையினரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலையே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டு உள்ளன. குறித்த ஆயுதங்களை ஆவா குழுவினர் தமது முகநூலிலும் பதிவிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த குழுவிடம் இருந்து ஒரு கைக்குண்டு , 6 வாள்கள், இரண்டு கைக்கோடாரிகள் மற்றும் முகத்தை மறைப்பதற்கு பயன்படுத்திய துணி என்பன கைப்பற்றப்பட்டு உள்ளன. கொழும்பில் மறைந்திருந்த ஆவா குழு உறுப்பினர்களான இக்ரம் எனும் முஸ்லிம் இளைஞன் உள்ளிட்ட மூவர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கோண்டாவில், கொக்குவில் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
கொழும்பில் கைது செய்யப்பட்ட இக்ரம் உள்ளிட்ட மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவர். ஏனைய மூவரும் விசாரணைகளின் பின்னரே அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்’ என காவல்துறையினர் மேலும் கூறினர்.