திருவனந்தபுரம்:
கன்னியாகுமரி அருகே கடலில் உருவான புயல் திருவனந்தபுரம் அருகே 60 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொச்சி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த புயல் காரணமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் 4.2 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழும்பும் என்றும் கடலிலும் சூறாவளியுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி கேரளாவில் கடலோர பகுதிகளில் இந்த புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. புயலை தொடர்ந்து கடலுக்கு சென்ற மீனவர்களை கரைக்கு திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் ஆழ்கடலுக்கு சென்றிருந்த மீனவர்கள் கரை திரும்பியிருந்தனர். எனினும் 270 மீனவர்கள் அறிவித்தலின் பின்பும் கரை திரும்பாத நிலையில் தேடுதல் பணி ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம் நகரமும் புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏராளமான மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளது. மழை காரணமாக இதுவரை 4 பேர் உயிர் இழந்து உள்ளனர். கேரள மீட்பு பணி குழுவினர் நிவாரண பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர். கேரள முதல்-அமைச்சர் பினராயிவிஜயன் உத்தரவின் பேரில் வெள்ள நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில்- திருவனந்தபுரம் பாசஞ்சர், கோட்டயம்-எர்ணாகுளம் பாசஞ்சர், எர்ணாகுளம்- கோட்டயம் பாசஞ்சர், எர்ணாகுளம்-நிலம்பூர் பாசஞ்சர், நிலம்பூர்- எர்ணாகுளம் பாசஞ்சர், புனலூர்-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ், பாலக்காடு-புனலூர் பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதே போல கோட்டயம்- கொல்லம் பாசஞ்சர், கொல்லம்-புனலூர் பாசஞ்சர், புனலூர்-கொல்லம் பாசஞ்சர், கொல்லம்- திருவனந்தபுரம் பாசஞ்சர், திருவனந்தபுரம்- நாகர்கோவில் பாசஞ்சர், புனலூர்-கன்னியாகுமரி பாசஞ்சர் ஆகிய ரெயில்கள் நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.