அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் முன்னாள் துணைத்தலைவரான கிரஹாம் ஃபுல்லரைக் கைது செய்யுமாறு துருக்கி உத்தரவிட்டுள்ளது . கடந்த வருடம் துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட அரச கவிழ்ப்பு முயற்சிக்கு ஃபெதுல்லா குலென் என்ற முஸ்லிம் மதகுரு காரணமாக இருந்தார் என்று துருக்கி குற்றம்சுமத்தியிருந்தது.
இந்தநிலையில் இவரோடு கிரஹாம் ஃபுல்லர் தொடர்புகொண்டிருந்தார் என குற்றம் சுமத்தியே கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. துருக்கி குடியரசின் அரசாங்கத்தை கவிழ்க்க ஃபுல்லர் முயற்சி செய்ததாக கைது ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு கடத்தப்பட்டு தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மதகுரு குலெனுடைய வலைப்பின்னலே கடந்த ஆண்டு ராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை ஏற்பாடு செய்ததாக துருக்கி தெரிவித்து வருகின்ற நிலையில் ஃபெதுல்லா குலென் அதனை மறுத்து வருகிறார்.
இந்த ஆட்சிக்கவிழப்பு தொடர்பில் அவரோடு இருந்ததாக தெரிவித்து 50,000 பேர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அரசு மற்றும் தனியார் துறைப் பணிகளில் இருந்து 1.5 லட்சம் பேர் இடைநீக்கம் அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது