அதிகரித்து வரும் ரோபோக்களின் பயன்பாட்டால்2030ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 800 மில்லியன் தொழிலாளர்கள், பணியாளர்கள்தங்களின் வேலையை இழப்பர் என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உலகின் 46 நாடுகளில் மேற்கொள்ளப்படும் 800 விதமான வேலைகளை பகுப்பாய்வு செய்ததில் உலகின் ஐந்தில் ஒரு மடங்கு வேலைகள் ரோபோக்களின் பயன்பாட்டால் பறிபோகும் என்று கண்டறிந்துள்ளது.
ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் மற்ற வேலைகளுக்கு தக்கவைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இயந்திரங்களை இயக்குபவர்கள் மற்றும் உணவுத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இதன் காரணமாக அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. தானியங்கிமயம் செய்வதற்கு அதிகம் செலவிட இயலாத ஏழை நாடுகள் வேலை இழப்பினால் பாதிக்கப்படாதென்று மெக்கன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 9 சதவீத வேலைகள் மட்டுமே வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் பாதிக்கப்படுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடமானத் தொழில் செய்வோர், சட்டம் சார்ந்த பணியாளர்கள், கணக்காளர்கள், மற்றும் அலுவலக உதவிப் பணியாளர்கள் இந்த ரோபோ பெருக்கத்தால் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பர்.
மனித தொடர்புகள் தேவைப்படும் வேலைகளான மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மதுபானம் பரிமாறுகிறவர்கள் போன்றவற்றில் தானியங்கிமயத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதென மெக்கன்சி தெரிவித்துள்ளது.
குறைந்த ஊதியத்தை பெறும் வேலைகளான தோட்டக்கலை, பிளம்பிங் மற்றும் பராமரிப்பு சார்ந்த பணிகள் போன்றவை தானியங்கிமயத்தால் குறைவாக பாதிக்கப்படும் என்று அந்த ஆய்வு கணித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் குறைந்த கல்வி தேவைப்படும் வேலைகள் குறைந்துவிடும் என்பதால் அங்கு பல்கலைக்கழக கல்வியின் தேவை அதிகரிக்கும்.
தானியங்கிமயத்தின் காரணமாக அமெரிக்காவில் மட்டும் 2030ம் ஆண்டுக்குள் 3.9 முதல் 7.3 கோடி வேலைகள் பறிபோகும் வாய்ப்பிருந்தாலும், அதில் வேலையிழக்கும் 2 கோடி பேர் எளிதாக மற்ற துறைகளுக்கு மாறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் மெக்கன்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இதே குறிப்பிட்ட காலத்தில் 20 சதவீத வேலைகள் தானியங்கிமயம் செய்யப்படும் என்று அதில் கணிக்கப்பட்டுள்ளது. 1900களின் தொடக்கத்தில் விவசாயத்திலிருந்து தொழிற்சாலை சார்ந்த வேலைக்கு உலகளாவிய தொழில்கள் உருமாற்றம் பெற்றதைப் போன்று இந்த மாற்றமும் இருக்க வாய்ப்புள்ளதாக இந்த அறிக்கையை எழுதியவர்கள் நம்புகிறார்கள்.
1980களில் கணினியின் அறிமுகம் தொழில்நுட்ப உதவி, இணைய வணிகம் போன்ற பல்வேறு புதுவிதமான வேலைகள் உருவாக வழிவகுத்ததைப் போலவே இந்த புதிய ரோபோ தொழில் நுட்பமும் புதுவிதமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சிக்கலை எதிர்கொண்டு தமது குடிமக்களைக் காப்பாற்ற புதிய திட்டங்களை வகுக்கும்படி அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது இந்த ஆய்வறிக்கை.
BBC