குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகளை இணைத்து கொள்வது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான தமிழரசு கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை கூடி ஆராய்ந்தனர்.
அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள், விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் சிலர் ஒன்றிணைந்து உருவாக்கிய ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் முன்னாள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜபெருமாளின் ஆகியவற்றை கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் போது பங்காளி கட்சிகளை சேர்ந்த சிலர் கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகளை இணைத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அதனால் புதியவர்களை இணைப்பதில் கடும் வாதம் நடைபெற்றதால் அதனை புதியவர்களின் இணைப்பு தொடர்பான விடயம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆசன ஒதுக்கீடு மற்றும் தவிசாளர் தெரிவு தொடர்பில் பங்காளி கட்சிகளுக்கு இடையில் இழுபறி ஏற்பட்டது. அவற்றை தொடர்ந்து சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேல் குறித்த கூட்டம் நடைபெற்று உள்ளது.
கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கும் போது ,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பலமானதொரு அணியாக களமிறங்கும். பங்காளி கட்சிகள் கூடி ஆராய்ந்ததில் 80 வீத இணக்கபாடுகள் எட்டப்பட்டு உள்ளன. பங்காளி கட்சிகளின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் இறுதி முடிவு எட்டப்பட்டு. அறிவிப்போம். கூட்டமைப்புக்குள் புதியவர்களை உள்வாங்கும் பேச்சுக்களும் நடைபெறுகின்றன. அனைத்து விடயங்கள் தொடர்பில் 5ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என தெரிவித்தார்.
அதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சிலர் தமக்கும் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் நிற்பதற்கு ஆசன ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி இருந்த போது , கூட்டமைப்பினர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர்.
அந்நிலையில் குறித்த பாராளுமன்ற தேர்தலில் , முன்னாள் போராளிகள் சிலர் ஒன்றிணைந்து ஜனநாயக போராளிகள் கட்சி என சிலந்தி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.