கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த, இலங்கையைச் சேர்ந்த, ஒரு குடும்பத்தின், நிரந்தர குடியுரிமைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.கனடாவின் மொன்றியல் பகுதியில் வசித்துவந்த, இந்தத் தமிழ்க் குடும்பத்தினர் நேற்று (3.12.17) நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், ஐக்கிய நாடுகள் சபைக்காக, கிழக்கு மாகாணத்தில் பணியாற்றி வந்தவரது குடும்பத்தினர் கடந்த 2012ஆம் ஆண்டு கனடாவில் அரசியல் தஞ்சம் அடைந்திருந்தனர். எனினும் நிரந்தர குடியுரிமை கோரியிருந்த அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதனால் நாடு கடத்தும் இந்த தீர்மானத்தை மீள பரிசீலிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம், அவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், அக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை மீள்திருத்தம் செய்யுமாறு கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட, நாடுகடத்தப்பட்ட குடும்பத் தலைவர், ”கனேடிய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமாக உள்ள போதிலும், கனேடிய சட்டங்களுக்கு நாம் கட்டுப்படுகிறோம். கடந்த 5 வருடங்களாக கனடாவில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழந்தோம். நாம் இன்னமும் கனடாவை நேசிக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.