ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால், சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார். விஷாலின் இந்த திடீர் அரசியல் பிரவேசம் திரைத்துறை மற்றும் அரசியல்வாதிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
ஏற்கனவே ஆர்கே நகரில் திமுக, அதிமுக, பாஜக, தினகரன், நாம் தமிழர் கட்சி, தீபா என்று 6 முனைப் போட்டி நிலவுகிறது. இது மட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷாலும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். இன்று காலையில் தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஷால் தொடர்ந்து சிவாஜி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனையடுத்து ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு விஷால் மாலை அணிவித்தார்.
இதேவேளை அரசியலில் பிரவேசித்துள்ள தன் பின்னால் மக்களே உள்ளார்கள் என விஷால் தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் மக்களுக்கு தேவையான எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. தமக்கு ஒன்றுமே செய்ய மாட்டார்களா என்ற ஏக்கம் மக்களிடம் உள்ளது. அந்த வகையில் ஆர்.கே. நகரில் விஷால் வெற்றி அடைந்தால் நமக்கு நல்லது நடக்கும் என அத்தொகுதி மக்கள் நம்புகிறார்கள். தனக்கு பின்னால் யாரும் இல்லை. மக்களுக்காக தானாக எடுத்த முடிவு இது விஷால் ஊடகவியலாளர்களிடம் தெளிவுபடுத்தி உள்ளார்.
“நான் அரசியல்வாதி அல்ல, ஒரு இந்திய குடிமகன். அதை அடையாளப்படுத்தவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் யாருக்கும் போட்டியும் அல்ல, எதிரியும் அல்ல. எனக்கு இளைஞர்களின் ஆதரவு இருக்கும். மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இது அமையும். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறேன் என விஷால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விஷால் திடீர் என ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட காரணம் அதிகாரம் படைத்த ஒருவர் எனப் பேசப்படுகிறது. இதற்கிடையில் உலக நாயகன் கமல் ஹாஸனின் கட்சி சார்பில் நடிகர் விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விஷால் சுயேட்சையாக தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது அரசியல் மட்டத்தில் விசேட அவதானிப்பை ஏற்படுத்தி உள்ளது.