குளோபல் தமிழ் செய்தியாளர்
யாழ்.பொன்னாலை பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டு உள்ளது.
ஊடகவியலாளரான பொன்ராசா மற்றும் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் கோமகன் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,
யாழ்.பொன்னாலை பகுதியில் உள்ள வெண்கரம் படிப்பகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விளக்கிட்டை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ரயர்களை போட்டு எரித்துள்ளார்கள்.
அதன் போது படிப்பகத்திற்கு கல்வி கற்க வந்த சில மாணவர்கள் ரயர் எரிப்பதை அந்த இடத்தில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்துள்ளனர்.
அதனை அவதானித்த ஊடகவியலாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆகிய இருவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த இரு மாணவர்களையும் கண்டித்து படிப்பதற்கு படிப்பகத்திற்குள் செல்லுமாறு அனுப்பி வைத்ததுடன் , ரயரை வீதியில் எரித்துக்கொண்டு இருந்தவர்களிடம் பொது போக்குவரத்திற்கு இடையூறாக ரயர்களை எரிக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து ‘ வெளியிடத்தில் இருந்து வந்தவன் எல்லாம் எங்களுக்கு அட்வைஸ் பண்ணுறீங்களா ?’ என கேட்டு இருவர் மீதும் சரமாரியாக கைகளால் தாக்கியுள்ளனர்.
அதில் அரசியல் செயற்பாட்டாளரான கோமகன் முகத்தில் காயமடைந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் அவ்விடத்தை சேர்ந்த து. சத்தியன் , து. ரங்கன் , இ. தர்சன் ஆகியோர் காவல்துறையினரால்; கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறைதடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.