ஏமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ், ஹவுத்தி போராளிகளுடனான மோதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மாளிகையை தாக்கி தரைமட்டமாக்கிய ஹவுத்தி போராளிகள் முன்னாள் ஜனாதிபதியை கொன்று விட்டதாகவும் அறிவித்துள்ளனர்.
அலி அப்துல்லா சாலே கொல்லப்பட்டதாக வரும் தகவல் தொடர்பாக அரச தரப்பில் இன்னும் உரிய விளக்கம் அளிக்கப்படாததால் இது வதந்தியாக இருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏமன் நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த மோதலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.