மும்பை நகரில் 1993 ஆம் ஆண்டு 13 இடங்களில் தொடர்ச்சியாக வெடித்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி உச்சநீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் 257 மக்கள் கொல்லப்பட்டதுடன் 728 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை மும்பை தடா நீதிமன்றம் விசாரித்த நிலையில் அதனுடன் தொடர்புடைய தாகிர் மெர்ச்சண்ட், பெரோஸ் அப்துல் ரஷித் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அத்துடன் மற்றொரு குற்றவாளியான அபு சலீமுக்கு ஆயுள்தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாகிர் மெர்ச்சண்ட் உச்சநீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததார். இந்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்துள்ளநிலையில் கைதியின் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள தடா நீதிமன்றின் சாட்சியங்களின் ஆவணங்கள் அனைத்தையும் 6 வாரத்துக்குள் சி.பி.ஐ. தாக்கல் செய்யும்படியும் தெரிவித்துள்ளது. அத்துடன் மனுதாரருக்கும் ஒரு பிரதியை வழங்குமாறும் உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 14ம்திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.