விஷால் அளித்த ஓடியோ ஆதாரத்தை ஆய்வு செய்த ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி சில திருத்தங்கள் செய்த பின்னர் அவரது வேட்பு மனு எற்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரியிடம், முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஓடியோ ஆதாரத்தை விஷால் வழங்கியுள்ளார்.. மேலும் தனக்காக முன்மொழிந்தவர்களை மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாகவும், வாபஸ் பெற கையெழுத்து பெறப்பட்டதாகவும் விஷால் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கான ஓடியோ ஆதாரத்தை ஆய்வு செய்த ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி சில திருத்தங்கள் செய்த பின்னர் விஷாலின் வேட்பு மனு எற்கப்பட்டதாக இன்றிரவு 8.20 மணியளவில் அறிவித்தார். இதன் மூலம் இங்கு விஷால் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு
: Dec 5, 2017 @ 11:48
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.
131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
இந்தநிலையிலேயே விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் வாக்கில் விஷாலின் வேட்புமனுவை ஏற்க கூடாது என தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் அவரது மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் இன்று மாலை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவும் தேர்தல் அதிகாரிகளால் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.