குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படப்போகும் சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில்; கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அவசர கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் தலைமையில் இடம்பெற்றது.
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பில் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் அரச திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சிவில் அமைப்புக்கள் என பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுளார்கள்.
வங்கக் கடலில் தற்போது 1100 கிலோமீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தால் ஏதாவது பாதிப்பு கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏற்படுமாயின் அவற்றுக்கான முன்னாயத்த மற்றும் அவசர நடவடிக்கைகள் நிவாரண சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சூறாவளியானது கிளிநொச்சி மாவட்டத்திற்கு சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்களை எவ்வாறு குறைத்துக்கொள்வது எனவும் விசேடமாக கடற்தொழிலாளர்கள் மற்றும் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு வெளியேற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பாக அவசர அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் அனர்த்தங்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்கு தொலைபோசி இலங்கங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 0212285330, 0772320528 இந்த இலக்கங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளமுடியும்.