பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அயோத்தி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அயோத்தி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை இராமர் பிறந்த இடத்தைக் கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் கடந்த 1992 டிசம்பர் 6ம் திகதி அன்று இடித்து தகர்த்தனர். இதனால் பல மாதங்களாக இடம்பெற்ற மதக்கலவரங்கள் காரணமாக சுமார் 2,000 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட டிசம்பர் ஆறாம் திகதியை இஸ்லாமிய அமைப்புகள் துக்க தினமாகவும், கறுப்பு நாளாகவும் அனுஸ்டித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழக்கம்போல் கறுப்பு தினம் அனுசரிக்கப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், வீர தினமாக அனுசரிக்கப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அயோத்தி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அயோத்தி நகருக்குள் புதிதாக நுழையும் வாகங்களை தணிக்கை செய்து, தடை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.