பாலியல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிடம், வன்முறைக்கு 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 25ம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாகவே சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மீத் ராமிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தில் உள்ள தேரா சச்சா சவுதா ஆசிரமத்தின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்ட நிலையில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குர்மீத் ராம் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததையடுத்து பல பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் 41 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர். இந்த வன்முறை தொடர்பாக குர்மீத் ராமின் ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது