எமது இனத்திற்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் போராளிகளைப்போல ஆசிரியர்களும் எமது இனத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று வலிகாமம் வலய பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அதிபர்,ஆசிரியர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்று மாலை மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலிகாமம் வலய பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றுகையில்….
எமது இனத்தின் விடிவிற்காக ஆயிரமாயிரம் போராளிகள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எமது எதிர்கால சந்ததியின் நல்வாழ்க்கைக்காகவே தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்களைப்போலவே ஆசிரியர்களும் எம் இனத்தை கல்வியில் உயர்த்துவதற்காக அரப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். உங்கள் அனைவரையும் எமது இனத்தின் கல்வியை உயர்த்துவதற்காக பாடுபடும் போரளிகளாகவே நான் பார்க்கிறேன். புனிதமான ஆசிர்யர் சேவையை வைத்துக்கொண்டு உங்களைப்போன்ற பலரை நீங்கள் அனைவரும் எம்மினத்திற்காக உருவாக்கித்தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்வில் வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளர், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர், உள்ளிட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.