வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் முக்கியஸ்தருமான வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்தியாவில் இருந்து, இலங்கைக்கு திரும்பிய வரதராஜப்பெருமாள் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தார். 1989 களில் ஈழப்பிரகடனத்தை மேற்கொண்டு இந்திய கப்பலில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற வரதராஜப்பெருமாள் ஏறத் தாழ 3 தசாப்த்தம் இந்திய வாழ்வில் ஈடுப்பட்டு இருந்தார். அத்துடன் இந்தியாவின் பாதுகாப்போர் பட்டியலில் இணைக்கப்பட்டு இந்தியக் குடியுரிமை பெற்றிருந்த வரதராஜப்பெருமாள் கடந்த ஆண்டு, இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. எனினும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆம் திருத்தின் பின்னர் வந்த இணைந்த வடக்கு – கிழக்கின் முதலாவது முதலமைச்சராக அவர் பதவி வகித்தார்.
எனினும் 13ஆவது திருத்தத்தைத் தீர்வாக ஏற்க தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்ததுடன், அதிகளவு சுயாட்சி அதிகாரங்களைக் கேட்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து முதலமைச்சர் பதவியைத் துறந்த வரதராஜப்பெருமாள், இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தார்.
போர் நிறைவடைந்ததையடுத்து இந்தியாவிலிருந்து சுற்றுலா நுழைவுவிசாவில் இலங்கைக்கு வந்து சென்ற வரதராஜப்பெருமாளுக்கு தற்போது இலங்கைக் குடியுரிமை மீள வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் மீண்டும் இலங்கையின் தீவிர அரசியலில் வரதராஜப்பெருமாள் இறக்கப்படுவார் எனவும், வடமாகாணத்தின் முதலமைச்சர் பதவியை நோக்கி நகர்த்தப்படுவார் எனவும் அரசியல் ஆரூடங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.