குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமற்போனமை தொடர்பில் எந்தவொரு தகவலும் விசாரணைகளில் கிடைக்கவில்லை என அச்சுவேலி காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி யாழ். நீதிமன்றில் இன்று சாட்சியமளித்தார். 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் சாட்சியமளித்தனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை எடுத்த அச்சுவேலி காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சாட்சியமளித்தார். ‘அவர்கள் இருவரும் காணாமல் போனமை தொடர்பான முறைப்பாடு கிடைத்தது. அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அவர்கள் காணாமற்போனமை தொடர்பான எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.
9ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றது. நான் 20ஆம் திகதி அச்சுவேலி காவல்நிலையத்திலிருந்து மாற்றலாகிவிட்டேன். அதன் பின்னர் வந்த பொறுப்பதிகாரிகளிடம்தான் கேட்கவேண்டும்’ என்று அச்சுவேலி காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சாட்சியமளித்தார்.