யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாடானது பெண்களிற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பெண்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்து அமைதி ஊர்வலம் ஒன்றினையும் மண்டப நிகழ்வும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கோரிக்கை மனுவானது யாழ் அரச அதிபரினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மண்டப நிகழ்வில் வீடு, வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களில் எவ்வாறு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது என்பது தொடர்பான பல்வேறுபட்ட பேச்சுகள் இடம்பெற்றன.
நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக பெண்கள் முகாமைத்துவத்தின் நிறுவுனர் மற்றும் தலைவருமாகிய கலாநிதி சுலோச்சனா சிகேரா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கனடா உயர்ஸ்தானிகத்தின் அரசியல் அதிகாரி திருமதி இந்திராணி ஜெயவர்த்தன அவர்களும் மகளிர் விவகார குழுவின் தலைவி யாழ்ப்பாணம் மற்றும் லயன்ஸ் கழகத்தின் வலய தலைவி திருமதி இராகினி இராமலிங்கம் அவர்களும் பங்கெடுத்ததுடன் சிறப்பு பேச்சாளராக சட்டத்தரணி திருமதி சாருஜா மயூரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.