குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம், காவற்துறையால் அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுள்ளனர். குறித்த செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அழித்த பின்னர் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு சென்ற கு.செல்வக்குமார், சு.பாஸ்கரன் த.பிரதீபன், த.வினோஜித், வி.கஜீபன், சி.நிதர்சன், க.ஹம்சனன், க.சபேஸ் ஆகிய ஊடகவியலாளர்களே இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு சிங்கள மயமாவது தொடர்பில் செய்தி மற்றும் ஆவணப்படுத்தல் செய்வதற்கு யாழ்ப்பாணத்தினை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இன்று சனிக்கிழமை அங்கு சென்றிருந்தனர்.
இதன் போது அவர்கள் தண்ணீர் முறிப்பு பகுதிக்கும் சென்றிருந்தனர். தண்ணீர் முறிப்பு குளத்தில் சிங்கள மீனவர்கள் தாமும் தொழிலில் ஈடுபட அனுமதிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் அக் கோரிக்கையை அரச அதிபர் அடியோடு நிராகரித்திருந்தார். எனினும் சிங்கள மீனவர்கள் இரானுவ பாதுகாப்புடன் அக் குளத்தில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை தொடர்ந்து வந்தது. இது தொடர்பில் தகவல்களை திரட்டியதுடன், அது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்களை ஊடகவியலாளர்கள் பதிவு செய்திருந்தனர்.
தண்ணீர் முறிப்பு குளப் பகுதியில் அரச திணைக்கள காணியான நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவம் குளத்தில் அத்துமீறி தொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் குள அணைக்கட்டில் புதிதாக அமைக்கும் இராணுவ கவலரன் தொடர்பில் செய்தி சேகரித்திருந்தனர். இதன் போது அங்கு துவிச்சக்கர வண்டியில் வந்த இரானுவ சிப்பாய் அங்கு நின்ற ஊடகவியலாளர்கள் யார் என்பது தொடர்பில் விசாரித்துள்ளார். இதன் போது தாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து அவர் விலகி சென்றுள்ளார்.
அங்கிருந்து விலகி சென்ற இராணுவ சிப்பாய் மேலும் மற்றுமொரு இரானுவ சிப்பாயை அழைத்துக்கொண்டு அங்கு வந்துள்ளார். அங்கு வந்த அவர்கள் ஊடகவியலாளர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணை செய்துள்ளனர். ஊடகவியலாளர்கள் என்பதை அவர்கள் உறுதிப்படுதியுள்ளனர். இருப்பினும் அவர்களை அங்கு தடுத்து வைத்த இராணுவம் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தியது.
பின்னர் சம்பவ இடத்திற்கு இராணுவத்தல் பொலிஸார் அழைக்கப்படனர். சிவில் உடையில் வந்த பொலிஸார் தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தாமல் ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்தியிள்ளனர். பொலிஸாரிடமும் ஊடகவியலாளர்கள் தங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் இராணுவம் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழிக்குமாறு ஊடகவியலாளர்களை வற்புறுத்தியுள்ளனர்.
பொலிஸார் ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளை பறித்த பொலிஸார் அதனை இராணுவத்திடம் ஒப்படைத்தனர். புகைப்பட கருவிகளை தம்வசப்படுத்திய இராணுவத்தினர் அதில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை அழித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் அங்கு நின்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளனர். மேலும் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகன இலக்கத்தை பதிவு செய்த இராணுவத்தினர் ஊடகவியலாளர்களின் விபரங்களையும் பதிவு செய்த பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர்.