உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மகாலில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் எந்தக் கட்டிடங்களும் புதிதாக கட்டுவதற்கு அனுமதியில்லை என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாஜ்கமகாலைப் பாதுகாப்பதற்காக தாஜ்மகால் பாதுகாப்பு ஆணையகம் உருவாக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலைப் பாதுகாப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற இந்த மண்டல ஆணையகம் தாம் எடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் சில ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
அந்த ஆவணங்களில் தாஜ்மகாலை சுற்றி 500 மீட்டர் தூரத்துக்குள் எந்தவொரு கட்டிடத்தையும் கட்டுவதற்கு அனுமதியில்லை என்ற புதிய உத்தரவையும் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தாஜ்மகாலை சுற்றியுள்ள 500 மீட்டர் பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் கள் மட்டுமே தங்களது சொந்த வாகனத்தைப் பயன்படுத்த முடியும். வாகனங்கள் இயக்குவதற்கு உள்ளூர் பகுதி மக்களுக்கு தேவையான அனுமதி அட்டைகள், மண்டல போக்குவரத்து மையங்கள மூலம் வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் ஆணையகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தாஜ்மகாலை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டைகளை எரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திடப் பொருள் கழிவுகளைக் கொட்டுவதற்கும், வீணாகும் விவசாய பொருட்களைக் கொட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து வகையான நடவடிக்களையும் ஆணையகமும், உத்தரப் பிரதேச அரசும் எடுத்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது