ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவலதுறை ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு, அப்பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.கே.விஸ்வநாதன் நேற்று முன்தினம் இரவு நேரில் ஆய்வு செய்திருந்தார். அதன்பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே ஏ.கே.விஸ்வநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 1,500 காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 நிலையான கண்காணிப்பு குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளர்.
மேலும் 36 வாகனங்கள், 26 பைக்குகளில் ரோந்து பணி நடந்து வருகிறது. விரைவில் 4 கம்பெனி துணை ராணுவப் படையினர் சென்னை வர உள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளர்.
தேர்தல் ஆணையத்தின் நடைமுறையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிமாநில, மாவட்ட வாகனங்கள் சென்னைக்குள் வர தடை இல்லை என்ற போதிலும் தவறான நோக்கத்தோடு சென்னை வந்தால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.