குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான விபரங்களை வெளியிடக்கோரி வடக்கின் பல பாகங்களிலும் கடந்த முந்நூறு நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று யாழ் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்
வலிந்து காணாமாலாக்கப்பட்டவர்களிற்கான அமைப்பிற்கான அமைப்பினர் ஏற்பாடு செய்த இந்த பேரணி யாழ் மாவட்ட செயலக்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பமாகியது
கிளிநொச்சி வரமராட்சி வவுனியா முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள தொடர்போராட்டம் முன்னூறு நாட்களை எட்டவுள்ளநிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து இப்போராட்டத்தில் தங்கள் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் புகைப்படங்களை தாங்கியவாறு கலந்துகொண்டனர்
ஜனாதிபதியால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதும் தற்போதுவரையில் இவ்விடயத்தில் எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவில்லை தெரிவித்த இவர்கள் நல்லாட்சி அரசு இதற்கு உரிய பதிலை வெகுவிரைவில் தரவேண்டும் எனவும் இல்லையேல் தமது போராட்டத்தினை சர்வதேசம் நோக்கி தாம் விஸ்தரிக்கப்போவதாகவும் தெரிவித்தனர்
இன்று காலை 10 மணிக்கு மாவட்டச்செயலக முன்றலில் ஒன்று கூடி பின்னர் பேரணியாக யாழ் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள ஐநா அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளனர்.
இப்போராட்டம் யாழ் கண்டிவீதியூடா கோவில் வீதியை அடைந்து பின்னர் யாழ் நாவலர் வீதியிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் சென்று நிறைவடைந்ததுடன் மனித உரிமை ஆணையாளருக்கான தங்கள் கோரிக்கைகள் அடங்கியம் மகஜரையும் ஐ.நா அலுவலகத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கையளித்தனர்