குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
தேசிய அரசு பிளவு பட்டால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவு படாமல் இருக்க வேண்டும். அதனாலையே ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவு பட கூடாது என்பதில் கரிசனை கொண்டுள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவு படாமல் இருக்கவேண்டிய தேவை உண்டு ஏனெனில் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனாவுக்கும், பிரதமருக்கும் இடையில் பிளவு ஏற்பட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு பிளவு ஏற்பட்டால் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் எனில் ஆதரவு இருக்க வேண்டும். அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை பொறுத்தவரை கூட்டமைப்பு பிளவு பட கூடாது. புதிய அரசு தோன்றினால் நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும்.
நாட்டில் உள்ள இன பிரச்சனைகளை தவிர தற்போது வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் , இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் , அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அவற்றை கூட இந்த அரசாங்கத்திடம் நிபந்தனையாக முன் வைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக வில்லை.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்க கூட நிபந்தனைகளை முன்வைக்க கூட தயாராக இல்லை. நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்
எங்கள் தலைவர்களே எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் பேசாது வேறு உலகில் இருப்பது போன்று உள்ளார்கள். இதில் இருந்து அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனையில் எவ்வளவு அக்கறை உள்ளவர்கள் என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.