குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழ்.சங்கானை பகுதியில் வாள்களுடன் வீதியில் அட்டகாசம் புரிந்து, கொள்ளையில் ஈடுபட்ட ஐவரில் நால்வர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். சங்கானை மருத்துவமனைக்கும், தொட்டிலடி சந்திக்கும் இடைப்பட்ட வீதியில் நேற்று மாலை 6 மணியளவில், 2 மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் கொண்ட கும்பல் வீதியால் சென்ற மக்களை அச்சுறுத்தும் வகையில் வாள்களை வீசி, தகாத வார்த்தைகளால் கத்தி, அட்டகாசம் புரிந்துள்ளனர். அதன் போது வீதியில் நின்றவர்கள் அவர்களை ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்துள்ளனர். அதனை அவதானித்த வாள் வெட்டு குழு தம்மை ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்தவர்களை துரத்தி தாக்க முற்பட்டு உள்ளனர். அத்துடன் சங்கானை சிலம்பு புளியடி ஆலயத்திற்கு அருகில் இருந்த வேலி மற்றும் இளைஞர் மன்று கதவுகள் என்பவற்றை சேதமாக்கினார்கள்.
அவ்வேளை வீதியால் வந்த பெண்ணொருவரின் கழுத்தில் வாளினை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு உள்ளனர். குறித்த சம்பவங்கள் தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு மானிப்பாய் காவற்துறையினர் விரைந்த போதிலும் , குறித்த குழுவினர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றிருந்தனர்.
சம்பவ இடத்தில் நின்றவர்களிடம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் , சம்பவ இடத்தில் நின்றவர்கள் எடுத்த ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். அதேவேளை சங்கனையில் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்று கொண்டிருந்த வேளை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த தெல்லிப்பளை காவற்துறையினரிடம் குறித்த வாள் வெட்டு கும்பலில் மூவர் மாட்டிக்கொண்டனர். இருவர் தப்பி சென்று விட்டனர். காவற்துறையினரிடம் மாட்டியவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகள் என்பன மீட்கப்பட்டன. அதனை தொடர்ந்து அவர்கள் மூவரையும் தெல்லிப்பளை காவற்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட விசாரணைகளின் அடிப்படையில் இன்னுமொருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படவர்களிடம் காவற்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் , தப்பி சென்ற மற்றவரையும் கைது செய்ய காவற்துறையினர்மே லதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.