கடும் பனிப்பொழிவின் காரணமாக பிரித்தானியாவின் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வான்வழி, புகையிரத மற்றும் தரைவழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
வட அயர்லாந்திலும், ஸ்காட்லாந்திலும் பனிப்பொழிவு இருக்குமெனவும் ஏனைய இடங்களில் இரவு முழுவதும் பனியின் தாக்கம் இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு ‘விழிப்புடன் இருப்பதற்கான’ மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இன்று மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது ஹீத்ரூ உட்பட பல விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று பிரான்சில் பல இடங்களில் கடும் குளிர் காற்று வீசுகின்றதெனவும் 20 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது