கேரள மாநிலம் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொலைக் குற்றவாளி அசாம் வாலிபர் அமீருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை விதித்து எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சி அருகே பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய, சட்டக்கல்லூரி மாணவியான ஷிஜா . கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் திகதி தனது வீட்டில் வைத்து வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
கேரள மாநிலம் முழுவதும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த இந்த கொலை அப்போது நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தலிலும் முக்கிய பிரச்சினையாக எடுத்து பிரசாரம் செய்யப்பட்டது. தேர்தலுக்கு பின் பினராய் விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அமைந்தது.
மாணவி ஷிஜா கொலை வழக்கை விசாரிக்க ஏ.டி.ஜி.பி. சந்தியா தலைமையில் தனிப்படை அமைத்து பினராய் விஜயன் நடவடிக்கை எடுத்தார். ஏ.டி.ஜி.பி. சந்தியா சிறப்பாக செயற்பட்டு இந்த கொலையில் தொடர்புடைய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் அமீருல் இஸ்லாம் என்பவரை கைது செய்தார். மாணவி ஷிஜாவை கிண்டல் செய்ததால் அமீருல் இஸ்லாமை அவர் செருப்பால் அடித்ததாகவும், அந்த ஆத்திரத்தில் இந்த கொலையில் அமீருல் இஸ்லாம் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், ஓராண்டாக நடந்த இந்த வழக்கு விசாரணையில், ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு இருந்த அமீருல் இஸ்லாமே குற்றவாளி என, நேற்று முன்தினம் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தல், தடையங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.