குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை மலினப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் கரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்ற போதிலும், அரசாங்கத்தின் மீது எதிர்ப்பை வெளியிட மக்களுக்கு ஒர் சந்தர்ப்பமாக இந்த தேர்தல் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரசாங்கம் 2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பொதுத் தேர்தலை நடத்தியதனைத் தொடர்ந்து எவ்வித தேர்தல்களையும் நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு தரப்புக்களும் ஒருவரை ஒருவர் ஆதரித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.