தேர்தல் பிரச்சாரங்களில் பொலித்தீன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது பொலித்தீன் பயன்படுத்தி பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடையை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலித்தீன் பயன்பாட்டை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரங்களில் பொலித்தீன் பாவனையை தடைசெய்ய ஜனாதிபதி ஆலோசனை
Dec 14, 2017 @ 13:22
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பொலித்தீன் பாவனையை தடைசெய்வதற்கும், பொலித்தீன் பாவனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி ; மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்காலத்தில் ஊடக கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்து உரிய தரப்பினரை அறிவுறுத்துமாறும் ஜனாதிபதி மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளை அறிவுறுத்தினார். உள்ளூராட்சி நிறுவனங்களில் கழிவு முகாமைத்துவத்தினை முறைப்படுத்தல் தொடர்பாக இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதனை எந்த வகையிலும் தாமதிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி , பிரச்சினைகள் காணப்படுமாயின் துரிதமாக அவற்றை தமக்கு முன்வைக்குமாறும் உரிய துறையினருக்கு ஜனாதிபதி ; இதன்போது அறிவுறுத்தினார்.