மியன்மாரின் ராகின் மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் ஒரு மாதத்தில் மட்டும் 6,700 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர் ( Doctors Without Borders ) அமைப்பு தெரிவித்துள்ளது
இது குறித்து எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் மியான்மரில் கலவரம் ஏற்பட்ட ராகின் மாநிலத்தில் ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 6,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் 730 பேர் ஐந்து வயதுக்குட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகின் மாநிலத்தில் ரோஹினிய முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை இனப்படுகொலை செய்யும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியன்மாரில் ரோஹினிய முஸ்லிம் பெண்களை அந்நாட்டு ராணுவத்தினர்; திட்டமிட்டு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தமை அங்கிருந்து தப்பி பங்களாதேசில் அகதிகளாக குடியேறியுள்ள சிறுமிகள், பெண்கள் உட்பட 29 பேரிடம் ஏபி செய்தி நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட நேர்காணலில் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.