கிரிக்கட் வீர் அஜிங்கிய ரஹானேயின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். புனே, கோல்ஹாபூரில் அவர் ஓட்டிச் சென்ற கார் வயதான பெண்மணி ஒருவர் மீது மோதியதில் பெண்மணி உயிரிழந்துள்ளதனையடுத்து ரஹானேயின் தந்தையான 54 வயதுடைய மதுகர் பாபுராவ் ரஹானே காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காகல் தாலுக்கில் இன்று வெள்ளிக்கிழமை (15.12.17) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காவற்துறையினரின் கருத்தின்படி, ரஹானே குடும்பத்தினர் கடற்கரை சுற்றுலா கிராமமான தர்கர்லிக்கு கோல்ஹாபூர் வழியாகச் சென்றதாகவும் காரை ஓட்டிச் சென்ற கிரிக்கெட் வீரர் ரஹானேயின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே, காரை வேகமாக ஓட்டி சென்றதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்று கொண்டிருந்த, 67 வயதுடைய ஆஷா காம்ப்லே என்ற பெண்மணி மீது காரை மோதியதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான அந்தப் பெண்மணியை, இருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குத் கொண்டு சென்றபோதும் அங்கு காயத்தின் தீவிரம் காரணமாக அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அலட்சியத்தினால் ஏற்பட்ட மரணம் தொடர்பான சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில், காகல் காவற்துறை நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் ரஹானேயின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.