இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் தேர்தலை நடத்திய குழுவின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அதற்கானசான்றிதழை ராகுல் காந்தியிடம் வழங்கியுள்ளார்.
132 ஆண்டுகள் வரலாற்றும், பாரம்பரியமும் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 19 ஆண்டுகளாக தலைமை தாங்கி வந்த சோனியா காந்தி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் ஓய்வு பெற விரும்பினார். இதனால் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தியை கடந்த 11ம்திகதி போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இந்தநிலையில் இன்று ராகுல்காந்தி முறைப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதற்கான விழா இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
முற்பகல் 11 மணிக்கு சோனியாவிடம் இருந்து தலைவர் பதவியை ராகுல் பெற்றார். இதையடுத்து ராகுலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின் ராகுல் தலைவராக பொறுப்பேற்றதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இதனையடுத்து காங்கிரஸ் தேர்தலை நடத்திய குழுவின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை ராகுல் காந்தியிடம் வழங்கினார். ராகுல் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் முதல்-அமைச்சர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கில் திரண்டு கலந்து கொண்டனர்