நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், மதுகோடா உள்ளிட்டோர் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், சதியாலோசனை செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற கடந்த 13ம் திகதி மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி தெரிவித்தார்.
இந்தவகையில் இன்றையதினம் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இரண்டு மாதங்கள் பிணை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.