500 ரூபா லஞ்சம் வாங்கிய வழக்கில் கோபி சார் ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 8 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தினைச் சேர்ந்த முதியோர் காப்பக ஆலோசகரான புஷ்பராஜ் என்பவர் கடந்த 2004-ம் ஆண்டு காப்பகத்தின் ஆண்டு அறிக்கையை பதிவு செய்ய கோபியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது சீட்டு மற்றும் சங்கங்கள் பிரிவின் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்த தங்கவேல் என்பவர் ஆண்டு அறிக்கையில் உள்ள தவறை மறைத்து பதிவு செய்ய 500 ரூபா லஞ்சம் பெற்றுள்ளதனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தநிலையில் லஞ்சம் வாங்கிய தங்கவேலுக்கு 8 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு தங்கவேல் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.