உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரம் தொடர்பான வழக்கு தொடர்பில் அமைச்சர் சுரேஷ் ராணா உள்ளிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் 2013-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 62 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் காயமடைந்திருந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
இந்தநிலையில் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் உத்தரபிரதேச சர்க்கரை ஆலை மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுரேஷ் ராணா உள்ளிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்க மாநில அரசிடம் அதிகாரிகள் அனுமதி கோரி வந்தனர். இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியதனைத் தொடர்ந்து இது குறித்து நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் சுரேஷ் ராணா உள்ளிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அத்துடன் மேற்குறிப்பிட்ட அனைவரையும் எதிர்வரும் வரும் ஜனவரி 19-ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளர்h.