ஆங்கிலத்தில் இருந்து தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
17.12.17 – 14:23pm
இலங்கையில் காணாமற்போனமை தொடர்பாக 65,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (மூலம்: Shutterstock) உரிமை மீறல் குறித்துப் பொறுப்புக் கூறல் தொடர்பான கேள்விகளுக்கு உலகலாவிய காலக்கிரம ஆய்விற்கு (UPR) கடந்த நவம்பர் மாதம் இலங்கை ஆற்றிய எதிர்வினை மழுப்பலானதாகவும் மெய்நிலையைத் திரிபு செய்யும் எண்ணத்தினாலானதாகவும் இருந்தது. வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் படியும் அந்தக் குற்றங்களுக்குப் (காணாமலாக்கப்பட்டமை மற்றும் ஏனைய உரிமை மீறல்கள்) பொறுப்பானவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறும் சர்வதேச சமூகம் இலங்கையைத் தூண்டுவதற்கு இது வழிசமைக்கும்.
முறையாக பொறுப்புக் கூறாமல் இலங்கை விலகியிருப்பதை அனுமதிப்பது என்பது ஐக்கிய நாடுகள் அவை மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்கள் சர்வதேச சட்டத்தின் மீதான தங்களது கடப்பாட்டிலிருந்து விலகியிருப்பது என்பதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடைய நீதிக்கான தேடலைக் கணக்கெடுக்காமல் புறக்கணிப்பது என்றும் அர்த்தப்படும்.
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி, அதாவது உலகலாவிய காலக்கிரம ஆய்வு (UPR) நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கூட, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் குழாம் ஒன்று (அதிலும் பெரும்பாலும் எல்லோரும் பெண்கள்) கொழும்பில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்தது. “நாங்கள் உங்களுடனும் மற்றும் பல அரச அதிகாரிகளுடனும் சந்தித்தும், இன்னும் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது அன்புக்குரிய உறவினர்களது தலைவிதியைக் கண்பிடிப்பதில் எந்த அடைவையும் நெருங்கவில்லை என்பதால் மிகுந்த மனமுறிவில் இருக்கின்றோம். உடைந்த வாக்குறுதிகளால் நாம் மீண்டும் மீண்டும் கைவிடப்பட்டுள்ளோம்” என சனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அந்த மனுவில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் காணாமற்போனமை தொடர்பாக 65,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக தீர்க்கப்படாத வழக்குகள் என்று வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் தன்னிச்சையற்ற காணாமலாதல் தொடர்பாக செயற்படும் குழுவொன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைகளில் ஈராக்கிற்கு அடுத்த படியாக இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டில் பதிவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சாவும் கைகுலுக்கிய போது (மூலம் AP)
விடுதலைப் புலிகள் என்ற விடுதலை இயக்கம் மகிந்த ராஜபக்சவின் இலங்கை அரசாங்கத்தால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இலங்கையின் சிவில் யுத்தத்தின் போதும் அதன் பின்பும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறலில் மீண்டும் இலங்கையைக் கொண்டுவருவதற்கான புதிய முயற்சியாக கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உலகலாவிய காலக்கிரம ஆய்வு அமைந்தது. ஐ.நாவின் ஒரு குழுவானது போர்க்குற்றங்கள் இழைத்ததாக போராளிகள் மற்றும் அரச படைகள் என இருதரப்பையும் குற்றம் சாட்டியது.
2015 ஆம் ஆண்டு சனவரியில் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் தேர்தல் தோல்வி ராஜபக்சவின் அட்டூழியங்கள் நிறைந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் சிறிசேனாவை சனாதிபதியாக்கியது. வலுவான மனித உரிமை சார்பு நிலையை எடுப்பதான தோற்றத்தைக் காட்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு மைத்திரிபால சிறிசேனாவின் புதிய அரசாங்கம் இணை அனுசரனை வழங்கி நான்கு நிலைமாறுகால நீதி வழங்கும் பொறிமுறைகளை உள்ளடக்கியதான தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் கடந்தகால மீறல்களுக்கு நிவாரணம் அளிப்பதாக உறுதியளித்தது.
அதில் ஒன்றான காணாமல் போனவர்களிற்கான அலுவலகம் (OMP) என்பது காணாமல் போனமை தொடர்பான விடயங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டது. மற்றையது, பொதுநலவாய நாடுகள் மற்றும் ஏனைய வெளிநாடுகளின் நீதிபதிகள் மற்றும் பாதுகாப்புச் சட்டவாளர்கள் உள்ளடங்கிய ஒரு சட்டப் பொறிமுறையை அமைப்பது. முழுமையாக இலங்கை நீதிபதிகளைக் கொண்ட ஒரு நீதிமன்றம் இலங்கையின் அரச படைகளுக்குப் பக்கச்சார்பாக இருக்கும் என்பதனாலேயே இந்த ஏற்பாடாகும்.
பதில் தேடித் திரிந்தமையால் தனது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நிற்கும் அரசாங்கத்துடனும் இராணுவத்துடன் முரண்பட்டு நின்றமை போல ஒரு தொடக்கம் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறிசேனாவுடன் இருக்கவில்லை. அவர்களது கோரிக்கைகள் பதிலளிக்கப்படாமல் இருந்த போது மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் மக்கள் ஒத்துழையாமை மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். காணாமல் போனமை தொடர்பாக ஆய்வுகளைச் செய்ய சனாதிபதி ஆணைக்குழுவினை (பரணகம ஆணைக்குழு) நியமிப்பதன் மூலம் எதிர்ப்புகளை கலைக்க ராஜபக்ச முயன்றார்.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நட்ட ஈடாக பணத்தை வழங்கியவாறு இராணுவத்தினரை குற்றஞ்சாட்டப்படுவதிலிருந்து காப்பதாகவே இந்த ஆணைக்குழுவின் அணுகுமுறை இருந்தது. அந்த அமைப்பில் முன்னின்று செயற்படும் முதன்மையான நபர்களை இலக்கு வைப்பதன் மூலம் போராட்டங்களைக் கலைத்துவிடுவது ராஜபக்ச அரசின் இன்னுமொரு தந்திரோபாயமாக இருந்தது. 2014 ஆம் ஆண்டில் காணாமலாக்கப்படவர் ஒருவரின் தாயான பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற முன்னணி செயற்பாட்டாளர் அரச படைகளால் கைது செய்யப்பட்டார். உள்ளூர் மற்றும் சர்வதேசக் குரல்கள் அவரை விடுவித்தது. ஆனால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை.
இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிப் போராளிகளுக்குமிடையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற கடுமையான போரில் இறந்த தனது உறவுகளுக்காக 2015 ஆம் ஆண்டில் வேண்டுதலில் ஈடுபடும் இலங்கைத் தமிழினப் பெண். (மூலம் AP)
காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அமைக்க சர்வதேச சமூகத்திற்கு முன்பாக அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும், அது தாமதமானது. இறுதியாக சட்டச் சரத்துகள் வரையப்பட்ட போது, அதிலுள்ள விடயங்கள் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளுக்கு முரணானதாயிருந்தது. இந்த அலுவலகமானது வழக்குத்தாக்கல் செய்யும் அதிகாரம் இல்லாதிருந்தது. மேலும், விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் “எந்தக் குற்றவியல் அல்லது சிவில் பொறுப்புகளுக்காகவும் கொடுக்கப்பட மாட்டாது” என்று இதிலுள்ள சட்டம் கூறுகிறது. நவம்பர் 16 ஆம் தேதி சனாதிபதி சிறிசேனாவுக்குத் தாங்கள் வழங்கிய மனுவில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இந்த அலுவலகத்தை அதனது தற்போதைய வடிவில் நிராகரித்தனர்.
எதிர்பார்ப்புகளை விட மிகக் குறைந்தளவில் செயற்படும் ஒரு நிறுவனத்தினை முகம் கொடுப்பதால், இந்த அலுவலகத்திற்கான சட்டவிதிகளை உருவாக்குவதில் பாதிக்கப்பட்டவர்களின் ஆதங்கங்களைப் புறக்கணித்துவிட்டு அரசுடன் இணைந்து செயற்பட்ட தம்மால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிகள் மீது அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 2016 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடன் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் முரண்பட்டனர். “தமிழர்களின் பிரதிநிதிகள் நீங்கள் இந்த அலுவலகம் அமைப்பதில் ஆதரவு வழங்கியுள்ளீர்கள். பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்காமல் எப்படி இப்படிச் செய்ய முடியும்?” என அதில் பங்கேற்றவர் கேட்டார்.
2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் தேதி முல்லைத்தீவு நகரில் நடைபெற்ற காரசாரமான கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது குடும்பங்களின் கவலைகளுக்குப் பதலளிக்க முயற்சித்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து எழுந்த முக்கியமான சிக்கல்களில் தாங்களும் ஒரு பாத்திரத்தை ஆற்ற வேண்டியிருப்பதாக காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் நம்பினார்கள்.
எந்தவொரு காலக்கெடு அல்லது காலவரையறையைக் குறிப்பிடாமல் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு 2 ஆண்டுகளை வழங்குவதாகக் கடந்த மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையகம் அறிவித்தது. மனித உரிமைகள் ஆணையகத்தின் இந்த நகர்வானது இலங்கையின் வஞ்சகத்தின் விளைவினாலானது என்று காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் விளங்கிக் கொண்டனர். இந்தப் போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுப் பெருமளவில் அழிவுகளைச் சந்தித்த நகரங்களான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இரு இடங்களிலும் எதிர்ப்புகள் வெடித்தன. கிளிநொச்சியில் ஒரு கொட்டகையை அமைத்த உறவுகள் காணாமல் போன தங்களது அன்புக்குரிய உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு அரசாங்கம் உரிய பதிலளித்தாலேயன்றி தமது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என உறுதி கூறினார்கள். ஏப்ரல் 27 அன்று, அவர்கள் ஒரு முக்கிய நெடுஞ்சாலையைத் தடுத்தனர்.
தங்களது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் முறையிட்டு எந்தப் பயனுமில்லாமல் களைத்துப் போன காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் காணாமல் போனவர்களின் தலைவிதி இறுதியில் தங்கியிருக்கும் நபர் என்று அவர்கள் நம்பியவரை அணுகினார்கள். கடந்த யூன் 12 ஆம் தேதி பெரும்பாலும் காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள் மற்றும் மனைவிமார்கள் அடங்கிய ஒரு குழுவினர் சனாதிபதி சிறிசேனாவைச் சந்தித்தார்கள். அவர்களது கோரிக்கைகளில் இரண்டு பட்டியல்கள் இருந்தன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவடையும் காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்தோரின் பெயர்ப்பட்டியல் ஒன்று. மற்றையது, அரசின் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விபரம்.
திஸ்ஸமகாராம, இலங்கை
இந்த பட்டியல்கள் முக்கியமானவை. ஏனென்றால் போரின் இறுதி மாதங்களில் எத்தனை பேர் சரணடைந்தனர் அல்லது எத்தனை பேர் அரசாங்கக் காவலில் இருந்தனர் என்பதற்கான உத்தியோகபூர்வ பதிவு எதுவும் இல்லை. காணாமல் போனவர்களின் குடும்பங்கள் முன்னர் இலங்கை நீதிமன்றங்கள் மூலம் இந்த தகவலைப் பெற முயன்ற போதிலும், நீதவான்கள் இராணுவத்தை அந்தத் தகவல்களை வழங்கும்படியாக நகர்த்த இயலாதவர்களாயேயிருந்தனர். சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் எப்படிக் காணாமலாக்கப்பட்டனர் என்றும் இரகசிய இடம் குறைந்தது ஒன்றாவது இருப்பது குறித்தும் ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று, சிறிசேன இந்த தகவலை விரைவில் வெளியிடுவதற்கு உறுதியளித்துள்ளார். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்தும் அந்தப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அரசாங்கத்தின் தந்திரம் தெளிவானது: அதாவது, களைத்துப்போன காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களை இந்தத் தகவல் தொடர்பாக ஒரு உறுதியில்லாமல் சந்தேகத்தில் வைத்திருப்பதன் மூலம் அவர்கள் போராட்டங்களை நிறுத்தி விடுவார்கள். அதே நேரம், எந்தவொரு இராணுவத்தினரும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றிற்காக சர்வதேச நீதவான்களின் முன்னாள் நிறுத்தப்படமாட்டார் என சிறிசேனா வெளிப்படையாகவும் தொடர்ச்சியாகவும் கருத்துத் தெரிவித்து வருகிறார். இவ்வாறாக ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது.
திஸ்ஸமகாராம, இலங்கை
சனாதிபதி சிறிசேனாவின் பாசாங்குத்தனத்தினால் மனமுறிவு ஏற்பட, ஒரு தாய்மார்கள் குழு கடந்த நவம்பர் மாதம் 16 அம் தேதி இதற்குச் சவாலாகச் செயற்படத் தீர்மானித்தனர். கொழும்பிலுள்ள சனாதிபதி செயலகத்தில் சனாதிபதி சிறிசேனாவைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், காணாமலாக்கப்பட்டோருக்கான சங்கத்தின் கிளிநொச்சிக்கான தலைவரான யோகராசா கனகரஞ்சினி இதற்கான சர்வதேச ஆதரவைக் கோரியதுடன் தொடர்ந்தும் போராடப்போவதாக உறுதி கூறினார்.
ஆண்டு தோறும் நடைபெறும் வெசாக் கொண்டாட்டத்துக்காக நன்கொடைகள் மற்றும் தானங்கள் சேகரிக்க பௌத்த துறவிகள் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி அன்று கொழும்பில் வீதியால் செல்கின்றனர். (மூலம்: ரொய்டர்ஸ்/ டினுக்க லியனவத்த)
“பௌத்தத்தைப் போதிக்கும் இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை மீளத் தருவார்கள் என்பதில் நாம் இன்று நம்பிக்கை இழந்துள்ளோம். ஆனால், நாம் காணாமலாக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கான போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தொடருவோம்”, என அவர் கூறினார். கொதிக்கும் வெயிலுக்கும் கொட்டும் பருவ மழைக்கும் நடுவில் 270 நாட்கள் இரவு பகலாகப் போராடி இதற்கு உறுதி செய்தனர். போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்த ஐந்து தாய்மார்கள் மரணமடைந்துள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் இதில் அலட்சியமாக இருக்கையிலும் காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பிலான நம்பிக்கையான தகவல்கள் வரும் வரையில் போராட்டத்தைத் தொடரும் காணமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு உறுதியாகவேயுள்ளது. இந்த உறுதியை உணர்ந்துகொண்டு போராட்டத்தைக் கலைத்துவிட கொழும்பு கடும் நடவடிக்கையில் இறங்க முடியும். சிறிசேனாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கெதிராக சர்வதேச சமூகம் எச்சரிக்கை செய்ய வேண்டியது முக்கியமானது.
அந்தத் தாய்மார்களின் நீதிக்கான அர்ப்பணிப்பு அல்லது வீரத்திற்கான மதிப்பு ஜெனிவாவில் அல்லது நியுயோர்க்கில் உள்ள இறுகிய மனம் கொண்ட இராசதந்திரிகளை தூண்டவில்லையென்றாலும், குறைந்தபட்சம் ஏதாவது நடக்கும். காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களின் நீதிக்கான கோரிக்கைகளை இந்த அரசாங்கம் தொடர்ந்து புறக்கணித்து வந்தால், அது போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் சிவில் ஒத்துழையாமையையும் தீவிரப்படுத்தும். இது அரசியல் உறுதித்தன்மை, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். போருக்குப் பிந்தைய சமரசமான நாட்டில் இவை எதையும் சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதில்லை.
மொழியாக்கம்: குளோபல் தமிழ் செய்திகள்:-