ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற 4 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடந்து வருகிறது. இந்தவகையில் கடந்த சில மாதமாக கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க வருபவர்கள் திடீரென தற்கொலைக்கு முயன்று வருவது வழமையாக உள்ளது.
இதனால் மக்கள் குறை கேட்பு முகாமில் இப்போது பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடந்த போது 4 பேர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.