செய்தி ஆய்வு – குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்…
குஜராத்தின் வட்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் தையல் இயந்திரம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சக்கரவர்த்தி விஜயகுமாரை, 35 வயதான தலித் சமூக ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி தோற்கடித்துள்ளார்
ஜிக்னேஷ் மேவானி யார், அவர் வட்கம் தொகுதியில் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து அனைவரது புருவங்களும் உயர்ந்த வண்ணம் உள்ளன… குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த ஜிக்னேஷ் நட்வர்லால் மேவானி செய்தியாளராகப் பணியாற்றியதோடு, சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த . 2016ல் அகமதாபாத்தின் உனா நகரில், பசு மாட்டு தோலை உரித்ததற்காக 4 தலித்துகள் பசுப் பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை உருவாக்கிய போது அப்பிரச்சனைக்கு எதிராக போராட தொடங்கியபோது ஜிக்னேஷ். பிரபலமானார்.
தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதம், குஜராத்தில் நடைபெற்ற மோடியின் குஜராத் வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டை எதிர்த்து ஜிக்னேஷ் மேவானி குரல் கொடுத்தார். தேர்தலில் சுயேச்சையாக களம் கண்ட ஜிக்னேஷ் தையல் இயந்திரம் சின்னத்தில் போட்டியிட்டு 95 ஆயிரத்து 497 வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். இவரது வளர்ச்சியையும் மக்கள் செல்வாக்கையும் கண்டு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர் ஜிக்னேஷுக்கு வட்கம் தொகுதியில் ஆதரவளித்தன. இதற்கும் அப்பால் ஜிக்னேஷுக்கு ஆதரவாக நிதி திரட்டப்பட்ட நிலையில், எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரான அருந்ததி ராய் சுமார் 3 லட்சம் ரூபாய் கொடுத்ததன் மூலம் தனது ஆதரவையும் வெளிப்படுத்தினார். அவரது ஆதரவும் சமூக மட்டத்தில் முக்கய திருப்பமாக பார்க்கப்பட்டது.
வட்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மூத்த தலைவர்களான நரேந்திர மோடி, அமித் ஷா, விஜய் ரூபானி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையிலும் அவற்றை தவிடுபொடியாக்கி ஜிக்னேஷ் அபார வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் பின்னால் இவை மட்டும் காரணங்களாக இருக்கவில்லை.
ஜிக்னேஷின் பிரசார குழு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டியது. திண்ணைப் பிரசாரம், தெருவோரக்கூட்டம், கிராமப்புற அளவிலான சிறு கூட்டங்கள் என தேர்தல் காலத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்தார்கள். மக்களுடன் இரண்டறக் கலந்தார்கள். பிரதமர் மோடியையும் அவர் தலைமையிலான பாரதீய ஜனதாவையும் ஏன் எதிர்க்க வேண்டும், தோற்கடிக்க வேண்டும் என விலாவாரியாக மக்களுக்கு புரிய வைத்தார்கள். ஜிக்னேஷின் அவரது குழுவினரின் யதார்த்தமான வாக்குறுதிகளை, பிரச்சாரத்தை, மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் நகர்வை வட்கம் தொகுதி மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.. விளைவு பலம்பொருந்திய ஆட்சியில் உள்ள ஒரு கட்சியை, அதன் வேட்பாளரை, ஒரு இளைஞர் சுயேட்சையாக நின்று வீழ்த்தியுள்ளார்.
வேட்டியில் மண் பிடிக்காமல், கையில் மிரரர் போத்தல் தண்ணீருடன், குளிருட்டிய வாகனங்களில் சென்று மக்களிடம் வாக்கு கேட்பதும், முகநூல் உட்பட்ட சமூக வலைத்தளங்களில் புரட்சி செய்வதும், உணர்ச்சியூட்டும் வசனங்களை எதுகை மோனையுடன் முழங்கிச் செல்வதும், வெற்றுவேட்டுக்களை மக்களிடம் அள்ளி வீசுவதும் ஜிக்னேஷின் வெற்றிகளை ஒருபோதும் தந்துவிடாது… அடிநிலை மக்களிடம் இருந்து, கிராமங்களில் இருந்து அர்ப்பணிப்புடன் கூடிய அரசியல் ஆர்வலர்கள் உருவாக வேண்டும்… அப்போது தான் வடக்கிலும் கிழக்கிலும் ஜிக்னேஷ்கள் உருவாகுவார்கள்… பலம்பொருந்தியவர்கள் அம்பலப்பட்டு வீழ்த்தப்படுவார்கள்..வெற்றிகளை நோக்கி மக்கள் நகர்த்தப்படுவார்கள்…