சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணை ஒன்றை இடைமறித்துள்ளதாக ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்திருக்கிறது. இந்த ஏவுகணையினை நேரில் பார்த்தோர் வெடிசத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளதோடு, காற்றில் புகை மூட்டம் எழும்புவதை காட்டுகின்ற காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். எனினும் குறித்த ஏவுகணையினால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
அதேவேளை அல்-யாமாமா அரண்மனையில் சந்தித்துப் பேசிய தலைவர்களைக் குறிவைத்து தாங்கள் புர்கான்-2 ரக ஏவுகணையை ஏவியதாக ஹூதி இயக்கத்தின் தொலைக்காட்சியான அல்-மாசிரா தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம், இதே போன்றதொரு ஏவுகணை ரியாத் விமான நிலையத்தை தாக்குவதற்கு மிகவும் நெருக்கமாக வந்தது குறிப்பிடத்தக்கது.