பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பயங்கரவாதக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 4 பேரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
West Yorkshire, பிரதேசத்தின் Sheffield and Chesterfield. ஆகிய பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடத்தப்பட்ட சோதனையின் போது, இவர்களைக் கைதுசெய்துள்ளதாக பிரித்தானிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
22, 31, 36, 41 ஆகிய வயதுகளையுடையவ இந்தச் சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும், இவர்களை, காவல்துறை நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.
பிரித்தானியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் எனற ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதனையடுத்து அனைத்து பகுதிகளையும் காவற்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான பொருட்கள் காணப்படும் இடத்து அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் துணையுடன் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் வடக்கு பிரித்தானியாவின் West Yorkshire பிரதேசத்தில் உள்ள Sheffield வீட்டில் நேற்று காவற்துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது 22, 36 மற்றும் 41 வயதுடையவர்கள் செய்யப்பட்டனர். அத்துடன் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அயலில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களை வெளியேற்றியபின், அனைத்து இடங்களிலும் சோதனையிட்டனர். இவ்வாறே Chesterfield Derbyshire பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் West Yorkshire காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், இவர்கள் கைது செய்யப்படாவிட்டால் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.