குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழில். சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவர் நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை பரீட்சை எழுதியுள்ளனர்.
குப்பிளான் மற்றும் வசாவிளான் பகுதியை சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளனர். குறித்த மாணவர்களில் ஒருவர் காய்ச்சலினாலும், மற்றையவர் பாம்புக்கடிக்கு இலக்கான நிலையிலும் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இரு மாணவர்களும் நடைபெறும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் என்பதனால் வைத்திய நிபுணர் மற்றும் தாதியர்கள் விசேட கவனம் செலுத்தி இருந்தனர். மாணவர்கள் இருவரும் பரீட்சை எழுதும் அளவுக்கு உடல் தகுதியை அடைந்திருந்த போதிலும் அவர்களை இருநாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய தேவை இருந்தமையால் மாணவர்கள் இருவரும் வைத்திய சாலையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மறுநாள் மாணவர்கள் பரீட்சை எழுத செல்ல வேண்டி இருந்தமையால் மாணவர்கள் இருவரையும் நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு அனுப்பி, தாதியர்கள் இருவரையும் துணைக்கு தெல்லிப்பளை வைத்திய சாலை வைத்திய நிபுணர் அனுப்பி வைத்திருந்தார்.
மாணவர்கள் இருவரும் பரீட்சை எழுதும் வரையில், பரீட்சை மண்டபத்திற்கு வெளியே தாதியர்கள் காத்திருந்து மாணவர்கள் பரீட்சை எழுதி முடிந்ததும், மீண்டும் வைத்திய சாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கினார்கள்.