பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் முதன்மை செயலாளராக இருந்த டேமியன் கிரீன் ( Damian Green) பதவி விலகியுள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறாக நடந்துகொள்வதாக கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரேசா மே உத்தரவிட்டிருந்தார். மேலும் பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய பிரதமர் தெரேசா மேயின் முதன்மை செயலாளர் டேமியன் கிரீனின் அலுவலக கணிணியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஆபாசமான படங்கள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து தெரேசா அவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டதாகவும் இதனையடுத்து அவர் நேற்றையதினம் பதவிவிலகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பதவிவிலகலை பிரதமர் தெரேசா மே ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து பதவி விலகியதாகவும் டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.